நூல் அறிமுகம்:
பொறியியல் மற்றும் பொருளறிவியல் வரலாற்றில், சில மைல்கற்கள்
திருப்புமுனைகளாகத் திகழ்கின்றன. இலகுவலிமன் (Composite) பொருட்களின்
கண்டுபிடிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அவ்வாறான ஒரு முக்கிய
மைல்கல்லாகும். விண்வெளி திட்டங்களை முன்னெடுத்த இந்திய
திருநாட்டிற்கு, இந்தத் தொழில்நுட்பம் கனவுகளை நனவாக்க உதவிய ஒரு
தொழில்நுட்பமாகத் திகழ்கிறது.
இந்நூலாசிரியர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலகுவலிமன்
தொழில்நுட்பத்தில் பல நிலைகளில் பணியாற்றி வருகிறார். இந்தத் துறை
சார்ந்த தொழில்நுட்பத்தை, செயல்முறை அறிவியலுடன் இந்நூலில்
ஒன்றிணைத்துள்ளார். பலவகையான இலகுவலிமன் பொருட்கள்
தயாரிப்பதிலும், சான்றளிப்பதிலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைக்
கொண்டு, கோட்பாடுகள் மற்றும் நடைமுறை செயலாக்கத்தை இணைத்து
இந்தத் தனித்துவமான நூலை எழுதியுள்ளார்.
பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு, இந்நூல்
மிகச்சிறந்த குறிப்பு கையேடாக விளங்கும். மேலும் உற்பத்தித் தளத்தில்
செயல்திறனை மேம்படுத்தக்கூடிய நடைமுறை பார்வைகளை வழங்கும்.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்தத் துறையைப் பற்றி
விரிவாக விளக்குவதோடு, இந்த மனதை கவரும் துறையில் ஆராய்ந்து
புதுமை செய்யத் தூண்டும் ஊக்கத்தையும் அளிக்கும். தொழில் நிபுணர்களுக்கு,
இலகுவலிமன் பொருட்கள் செயலாக்கத்தின் அனைத்துப் படிநிலைகளிலும்
புரிதலை வலுப்படுத்தவும், தரத்தை மேம்படுத்தவும், இந்நூல் பயன்படும்.
இந்த நூலின் வலிமை அதன் எளிமையில் இருக்கிறது. சிக்கலான
தொழில்நுட்பங்களை எளிய உதாரணங்களோடு அனைவரும் புரிந்து கொள்ளும்
வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் பொறியாளர்கள்
மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தவும், சிறந்த
நடைமுறைகளைப் பயன்படுத்தவும் இது உதவும். அதேசமயம், மாணவர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் துறையின் அடிப்படையை அறிந்து
கொள்வதோடு உற்பத்தியின் போது சந்திக்கப் போகும் நடைமுறை சவால்களை
எதிர்கொள்ளும் பார்வையை வளர்க்கவும் வழிகாட்டுகிறது. விண்வெளி
பயன்பாடுகளைத் தாண்டி பிற தொழில்களிலும் இலகுவலிமன் தொழில்நுட்பம்
எவ்வாறு பயன்படுகிறது என்பதும் அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய புத்தகங்கள் இந்தத் துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு
செல்வதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. உற்பத்தி நடைமுறைகளையும்,
கற்றல்களையும் தெளிவாக ஆவணப்படுத்துவதன் மூலம், அடுத்தத்
தலைமுறைக்குத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு, ஒவ்வொரு பொருளின்
உருவாக்கத்தின் போதும் அறிந்து கொள்ள வேண்டிய நுட்பங்களையும்
தெளிவுபடுத்துவது முக்கியம்.






Reviews
There are no reviews yet.