நூலாசிரியர் முனைவர் சசிக்குமார் அவர்கள் அறிவியலை வாழ்வியலோடு இணைத்து
தமிழருக்குப் பல நூல்களை வழங்கியுள்ளார். அவை அனைத்தும் அறிவு முதிர்ந்த
சமூகப்பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடுகளாகத் திகழ்கின்றன. ஆனால் “செல்லப்பிள்ளை”
நூல் அவ்வாறல்ல; இது தனிமனித ஒழுகலாற்றின் அறத்தைச் சரியாக வடிவமைக்கும் ஒரு
வாழ்வியல் நூலாக அமைந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகளும், அவற்றின்
உட்பொருளாக விளக்கப்பட்டுள்ள உளவியல் சிந்தனைகளும், அறிவியல் அணுகுமுறைகளும்
வளர்ந்த காலத்திற்கேற்ற புறவடிவமைப்பை அளிக்கின்றன. “தனிமனித அகவயப்
பண்படுதலை” உருவாக்கி, “எங்கும் இனிது எதிலும் இனிது” என்ற எண்ணத்தை வளர்க்கும்
நோக்கத்துடன் உளவியல் கோட்பாடுகளை எளிமையாக எடுத்துரைக்கும் தன்மை இந்த
நூலுக்கு உண்டு.
படிப்பு மட்டும் வாழ்க்கையை நிர்ணயித்து விடாது; வாழ்க்கைக் கல்வி மிக முக்கியம் என்ற
நூலாசிரியரின் புரிதலை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நாம் இயல்பாக விவாதம் செய்யும் பல தலைப்புகள்
இந்நூலில் கட்டுரைகளாக அமைந்துள்ளன. நாம் தினமும் கடந்து செல்லும் அனுபவங்களை
வெற்றிகரமான கோணத்தில் எப்படி அணுக வேண்டும் என்பதைக் இந்த நூல்
தெளிவுபடுத்துகிறது.
குழந்தைகள் பதின்பருவத்தை அடையும் போது பெற்றோருக்குத் துணையாக நிற்க வேண்டும்
என்ற கருத்தை வலியுறுத்தும் ஆசிரியர், அதையே மையமாகக் கொண்டு எழுதிய
“செல்லப்பிள்ளை” என்ற கட்டுரையின் தலைப்பையே இந்த நூலுக்கும் வழங்கியுள்ளார்.
குழந்தைகள் வளர்ப்பில் உளவியல் கூறுகள் நிறைந்துள்ளன என்று அறிஞர்கள் கூறினாலும்,
அவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ளச் செய்வது சிரமமானது. அந்தக் கடினமான
கருத்துகளை எளிய வாழ்வியல் உதாரணங்களுடன் புரியவைக்கும் முயற்சியே இந்த நூலின்
முதல் கட்டுரையான “செல்லப்பிள்ளை”. சரி எது, தவறு எது என்பதைக் தெளிவான
நிகழ்வுகளின் மூலம் விளக்குகிறது.
இதுபோல மொத்தம் 11 தலைப்புகளின் கீழ், வாழ்விற்குத் தேவையான சூழலமைப்பு,
கருத்தாக்கம், நடத்தைகள், ஈடுபாடு, விலகல், மாற்றம் போன்ற பல அறச் சிந்தனைகள் மற்றும்
எதார்த்த வாழ்வியல் கோட்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் யாருக்கும்
அறிவுரை வழங்கவோ குற்றம் சாட்டவோ எழுதப்பட்டவை அல்ல என்று ஆசிரியர்
குறிப்பிட்டிருந்தாலும், அவை நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும் வலிமையுடையவை.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களின் செயல்களும், பல நேரங்களில் நாமே நடந்து
கொள்ளும் விதங்களுமே இந்தக் கட்டுரைகளின் கருப்பொருளாக அமைந்துள்ளன.
வரலாற்றைப் பார்த்தால், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கியவர்கள் அனைவரும் இந்நூலில்
உள்ள சிந்தனைகளுக்குச் சமமான எண்ணங்களை நடைமுறைப்படுத்தியவர்களே என்பதை
உணர முடிகிறது. அதனால், இந்நூல் வெறும் கட்டுரைத்தொகுப்பு அல்ல; சமூக மேம்பாட்டை
நோக்கி வழிகாட்டும் சிந்தனை நூலாகத் திகழ்கிறது.
ஆசிரியரின் எழுத்துநடை எப்போதும் வாசகனை ஈர்க்கும் இனிமையுடனும் ரசனையுடனும்
அமைகிறது. இந்த நூலில் அது இன்னும் ஆழமடைந்து, அழகுணர்ச்சியுடனும் எதார்த்த
உணர்வுடனும் வெளிப்படுகிறது. ஒவ்வொரு கருத்தையும் விளக்க அவர் எடுத்துக்காட்டும்
நிகழ்வுகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே நடப்பவையாக இருப்பதால்,
சொல்லப்படும் கருத்துகள் வாசகனின் மனதில் எளிதில் பதிகின்றன.
“செல்லப்பிள்ளை” நூலின் கருத்துகளைச் சமூகம் ஏற்று நடைமுறைப்படுத்தும் போது, இனிமை
நிரம்பிய எதிர்காலச் சமூகத்தை உருவாக்க முடியும். அதுவே இந்த நூலின் மிகப் பெரிய
வெற்றியாகும்.






Reviews
There are no reviews yet.